கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
ரூ.1000 மாதத் தொகை திட்டத்தில் ஒரே நேரத்தில் ரூ.5000 – பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி
தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாநிலம் முழுவதும் பெண்களின் வாழ்க்கையில் நேரடி பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
குடும்பத் தலைவிகளின் அன்றாட செலவுகள், சேமிப்பு மற்றும் சுயநிலையை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.1000 பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தை 2023 செப்டம்பர் 15 அன்று, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடக்கத்திலிருந்தே இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது 1.31 கோடி பெண்கள் இந்த உதவித் தொகையைப் பெற்று வருகின்றனர்.

ஏன் ஒரே நேரத்தில் ரூ.5000?
பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியன்று மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
ஆனால் இந்த முறை, 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதற்கு முன்தினம் இரண்டாம் சனிக்கிழமை என்பதால், வங்கி விடுமுறைகளை கருத்தில் கொண்டு அரசு முன்கூட்டியே தொகையை விடுவித்தது.
அதுமட்டுமின்றி, தேர்தல் காலங்களில் திட்டங்களில் இடையூறு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக, வரவிருக்கும் மாதங்களுக்கான தொகையையும் சேர்த்து ரூ.5000 ஒரே முறையாக வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் முன்கூட்டிய மாதத் தொகை ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்பு உதவியாக ரூ.2000 சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வங்கிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்.?
ரூ.5000 ஒரே நேரத்தில் கணக்கில் வரவு வைக்கப்பட்ட செய்தி சமூக ஊடகங்கள் மற்றும் வங்கி மெசேஜ்கள் மூலம் பரவியதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வங்கிகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஏடிஎம் மையங்கள் மற்றும் கிளைகளில் பெண்கள் அதிகளவில் திரண்டனர்.
சிலருக்கு கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டிருந்தாலும், மெசேஜ் வராததால் குழப்பம் ஏற்பட்டது.
மெசேஜ் வரவில்லை என்றால் பதற்றம் வேண்டாம்
இந்தத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து ரூ.1000 பெற்று வந்த பெண்களுக்கு, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த முறை ரூ.5000 நிச்சயமாக வந்திருக்கும்.
ஆனால் சில வங்கிகளில் தொழில்நுட்ப காரணங்களால் எஸ்எம்எஸ் தாமதமாகவோ அல்லது வராமலோ இருக்கலாம். அதனால், மெசேஜ் வரவில்லை என்பதற்காக உடனடியாக பதற்றப்பட தேவையில்லை.
முதலில் அருகிலுள்ள வங்கி கிளைக்கு சென்று, உங்கள் கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டும். வங்கி அதிகாரிகள் மூலம் தெளிவான தகவலை பெறலாம்.
சிலரின் கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டிருக்கலாம், சிலருக்கு இன்று அல்லது அடுத்த வேலை நாளில் (திங்கள்) வரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.5000 வரவே இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
ஒரு வேளை, மாதந்தோறும் ரூ.1000 பெற்று வந்தவராக இருந்தும், இந்த முறை ரூ.5000 உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால், உடனடியாக கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு:
உங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று, மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதது குறித்து எழுத்துப்பூர்வ மனு அளிக்கலாம். இதன் மூலம் உங்கள் விண்ணப்ப நிலை மீண்டும் சரிபார்க்கப்படும்.
முதல்வரின் உதவி மையத்தில் புகார்:
cmhelpline.tnega.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.
புகார் பதிவு செய்த பின், அதற்கான குறிப்பு எண்ணை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
விடுபட்டவர்களுக்கு தொகை கிடைக்குமா?
அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து தகுதியான பெண்களுக்கும் ரூ.5000 நிச்சயமாக வழங்கப்படும்.
வங்கி விடுமுறை, தொழில்நுட்ப சிக்கல் அல்லது கணக்கு சரிபார்ப்பு காரணமாக சிலருக்கு மட்டும் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்.
விடுபட்டவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, விரைவில் அவர்களின் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தொகை உயருமா?
மேலும் ஒரு முக்கிய அறிவிப்பாக, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைந்தால், மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதற்காக அரசு ஏற்கனவே ரூ.6550 கோடி நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் பொருளாதார சுயநிலைக்கான முக்கிய திட்டம்.?
மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், விடியல் பயணம், தோழி விடுதிகள், பிங்க் ஆட்டோ போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பெண்களின் வாழ்க்கையில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய சமூக நலத் திட்டமாக உருவெடுத்து வருகிறது.
SBI Women Loan: பெண்கள் தொழில்முனைவோருக்கு ஸ்த்ரீ சக்தி பேக்கேஜ் என்ன?